Tuesday, February 8, 2011

நாத்திகம் வாழ்க!

ஆத்திகரைக் காட்டிலும் - நான்
நாத்திகரை போற்றுகின்றேன்!
விடையைத் தேடுபவர்,
விடையை அறிந்தவர்
எவர் பெரியோர் இவ்விடத்தில்?
இறையைத் தேடி இருப்பவர் ஆத்திகர்!
அதனைத் தேடி முடித்தவர் நாத்திகர்!
கடவுள் இல்லை என்பதை
நாத்திகம் சுருங்கச் சொல்கிறது!
அதையேதான் ஆத்திகமும் சொல்கிறது!
கடவுள் இல்லை - இது நாத்திகம்!
கடவுள் என்பது எதிலும் இல்லை - இது ஆத்திகம்!
கடவுள் என்பவர் எவரும் இல்லை!
கடவுள் என்பது எதுவும் இல்லை!
ஆதியும் இல்லை! அந்தமும் இல்லை!
உருவமும் இல்லை, அருவமும் இல்லை!
அகமும் இல்லை, புறமும் இல்லை!
மெய்யும் இல்லை, பொய்யும் இல்லை!
ஒளியும் இல்லை, இருளும் இல்லை!
அளவிடத் தகுந்த அளவும் இல்லை!
உணர்ந்திடத் தகுந்த உணர்வும் இல்லை!
விளங்கிடத் தகுந்த விளக்கமும் இல்லை!
இல்லை இல்லை இல்லை இல்லை!
இப்படி இத்தனை இல்லைகள் எனவும்
அத்தனை இல்லைகள் அனைத்திலும் அவனே!
இல்லைகள் என்பது இருக்கும் வரையே
இருக்கும் என்பதன் மதிப்பும் உயரும்!
நாத்திகம் இன்றி ஆத்திகம் இல்லை!
ஆத்திகம் இன்றி நாத்திகம் இல்லை!
நாத்திகம் வாழ்க! நாத்திகம் வாழ்க!
நயம்பட நானும் வாழ்த்துவேன் பாரீர்!
பக்கத்து இலைக்கும் பாயசம் தாரீர்!

2 comments:

Nanjil Kannan said...

அருமை நாத்திகத்தை வெளிப்படையாய் போற்றி உண்மையாய் ஆத்திக்கத்தை போற்றிய அருணை வாழ்க எந்நாளும் :)) இறைவா

இராஜராஜேஸ்வரி said...

பாசிட்டிவும் நெகட்டிவும் சேர்ந்தால் தானே மின்சாரம் உண்டாகும்??